ஐதராபாத்தில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் லாரி ஓட்டுநர்கள் முகமது ஆரிப், சென்னகேசவலு, கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைதான 4 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர், கொலை எப்படி நடந்தது என்பதை நடித்துக் காட்டுவதற்காக 4 பேரையும் பெண் மருத்துவர் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது காவல்துறை. அப்போது தப்பியோட முயன்ற 4 பேரும் காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகவும் தற்காப்புக்காக 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், என்கவுன்டர் செய்தது தொடர்பாக, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களை 9ஆம் தேதி மாலை 6 மணி வரை பதப்படுத்தி வைக்க தெலங்கானா அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் பிரேத பரிசோதனை வீடியோவை சிடி அல்லது பென் டிரைவ்-வில் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.