தமிழ்நாட்டில் மாணவர்களின் நலன் கருதி, ஒன்றும் முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி பள்ளிகள், தொலைதூர கிராம பள்ளிகளில் தொடங்கப்பட்ட திட்டத்தை, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பலரது மத்தியிலும் திட்டம் வரவேற்பை பெற்ற நிலையில், திட்டம் தொடர்பாக கடந்த ஆக.31ம் தேதி தெலங்கானா அதிகாரிகள் குழு சென்னை வந்து ஆய்வு செய்தது. திட்டத்தின் நடைமுறை குறித்து ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இனி தங்களது மாநிலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவை சேர்ந்தவர்கள் சத்தான காலை உணவை பெற வேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கம் என்று அதிகாரிகள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 5ம் வகுப்பு வரை திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், தெலங்கானாவில் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைபோல கர்நாடகா, புதுச்சேரி அரசுகள் ஏற்கெனவே பின்பற்றுகின்றன.
வெளிமாநிலங்களுக்கு செல்லும்போதெல்லாம் தமிழக அரசின் திட்டம் குறித்து அம்மாநில தலைவர்கள் விசாரிப்பதாக முதல்வர் நேற்று பெருமிதம் தெரிவித்த நிலையில், தெலங்கானா மாநில அரசின் அறிவிப்பு பலரது மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.