டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதாவை, அமலாக்கத் துறை நேற்று கைது செய்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, ஹைதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன்முடிவில் ஆந்திர மேலவை உறுப்பினரான கவிதா அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அப்போது, பிஆா்எஸ் செயல் தலைவரும் கவிதாவின் சகோதரருமான கே.டி.ராமராவ், முன்னாள் அமைச்சா் ஹரீஷ் ராவ் மற்றும் கட்சித் தொண்டா்கள், கவிதாவின் வீட்டில் திரண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனா். அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ராமராவ் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதுதொடா்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கவிதாவை டெல்லி அழைத்துச் சென்ற அமலாக்கத் துறையினர், அங்குள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 16) ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைக்க சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார். அமலாக்கத் துறை தரப்பில் 10 நாள்கள் காவல் கோரிய நிலையில் 7 நாள்கள் மட்டும் கவிதாவை காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. முன்னதாக, கவிதா தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருப்பதுடன், அரசியல் ஆதாயத்திற்காக பாஜக, ED வழியாக தன்னை குறிவைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: ISPL T10: அரையிறுதி வரை முன்னேறிய சூர்யா அணி.. கோப்பையை உச்சிமுகர்ந்த கொல்கத்தா!