தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் அருகே பட்டாஜ்செருவில் உள்ள கீடெம் பல்கலைக்கழக கல்லூரியில் மாதாபூர் பகுதியை சேர்ந்த ரேணு ஸ்ரீ என்ற மாணவி பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வகுப்பு முடிந்த பின் கல்லூரியின் ஆறாவது தளத்திற்கு சென்ற ரேணுஸ்ரீ திடீரென்று கைப்பிடி சுவர் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இந்த தற்கொலை முயற்சியை பார்த்த சக மாணவ, மாணவிகள் குதிக்க வேண்டாம் என்று கத்தியுள்ளனர். ஆனாலும் அவர் ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அங்கு இருந்த சில மாணவ மாணவிகள் அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ரேணுஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.