செய்தியாளர்: எழில் கிருஷ்ணா
தெலுங்கானா மாநிலம் கண்டோன்மென்ட் சட்டமன்ற உறுப்பினர் லாஸ்யா நந்திதா (33) காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, படன்சேரு அருகே வெளிவட்ட சாலையில் (ஓஆர்ஆர்) பக்கவாட்டு தடுப்பில் கார் மோதிய நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் படுகாயம் அடைந்த கார் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து நந்திதாவின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜி.சயன்னாவின் மறைவையடுத்து அவரது மகளாக லாஸ்யா நந்திதா, கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிஆர்எஸ் கட்சியின் சார்பாக செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நர்கெட்பல்லியில் நடந்த மற்றொரு சாலை விபத்தில் நந்திதா லேசான காயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.