தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்ற நிலையில் அக்கட்சியின் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் உறுப்பினர்களாக இன்று (டிச.9) பதவியேற்றனர். இடைக்கால சபாநாயகர் அக்பருதீ்ன் ஒவைசி பிற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எனினும் அக்பருதீன் ஒவைசி பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை ஏற்க முடியாது என பாஜக உறுப்பினர் ராஜா சிங் தெரிவித்தார்.
”சபையில் மூத்த உறுப்பினர்கள் பலர் இருக்கையில், அக்பருதீனை தற்காலிக சபாநாயகராக நியமித்தது ஏற்புடையது அல்ல; இது சபை விதி மீறல்” என்றும் மாநில பாஜக தலைவர் கிஷண் ரெட்டி கூறினார்.
பேரவைத் தேர்தலில் நூலிழை பெரும்பான்மையிலேயே காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளதாகவும், எனவே ஏஐஎம்ஐஎம் கட்சியின் ஆதரவு எதிர்காலத்தில் தேவைப்படும் என கருதி அக்கட்சி உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் நியமித்துள்ளதாகவும் கிஷண் ரெட்டி விமர்சித்துள்ளார். முழு நேர சபாநாயகர் நியமிக்கப்பட்டபின், அவர்மூலம் பாஜக உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொள்வார்கள் என்றும் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
119 உறுப்பினர்கள் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் ஏஐஎம்ஐஎம் 7 இடங்களிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.