கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக கூறியிருந்த கம்யூட்டர் தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜா, காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் ஆகியோர் மீது தெலங்கானா பாஜக தலைவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
2014- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, கம்யூட்டர் தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜா குற்றஞ்சாட்டியிருந்தார். லண்டனில், பிரிட்டனைச் சேர்ந்த இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்கைப் மூலம் பேசிய அவர், இந்த குற்றச்சாட்டை கூறினார். இதில் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சையத் சுஜா மேலும் பேசும்போது, தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஈவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்ய உதவியது என்ற அவர், இந்தச் செய்தியை வெளியிட ஒப்புக்கொண்ட கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார் எனவும் இந்த மோசடி பற்றி தெரிந்ததால், பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, சாலை விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டார் என்றும் கூறினார்.
பாஜக தவிர சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இயந்திரங்களை ஹேக் செய்வதற்காக, தன்னை அணுகியதாகவும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப் பட்டதால் காங்கிரஸ் 201 இடங்களில் தோற்றது என்றும் கூறினார்.
இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள தேர்தல் ஆணை யம், தவறான தகவல்களை பரப்புவதாக, சையத் சுஜா மீது டெல்லி போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் அவர் மீதும், லண்டனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டி, காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் மீதும் தொழில் நுட்ப நிபுணர் சையத் சுஜா மீதும் தெலங்கானா டிஜிபி மஹேந்தர் ரெட்டியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
(கிஷன் ரெட்டி)
அதில், 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, ஐதராபாத்தில் வகுப்பு கலவரத்தைத் தூண்டி 11 பேர் கொல்லப்பட, தான் காரணமாக இருந்ததாக, சையத் சுஜா தவறாகக் குற்றஞ் சாட்டியிருப்பதாகவும், கபில் சிபலும் அவரும் தன்னையும் தன் கட்சியின் மீதும் அடிப்படை ஆதாரமற்றக் குற்றச்சாட்டைக் கூறி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.