அம்ருதா தந்தை உட்பட 3 பேர் மீது ஆணவக்கொலை வழக்குப்பதிவு

அம்ருதா தந்தை உட்பட 3 பேர் மீது ஆணவக்கொலை வழக்குப்பதிவு
அம்ருதா தந்தை உட்பட 3 பேர் மீது ஆணவக்கொலை வழக்குப்பதிவு
Published on

தெலுங்கானாவில் மனைவி கண் முன்னே கணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆணவக்கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

தெலுங்கானாவின் நெலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஜோடிகள் ப்ரனய் - அம்ருதா. இவர்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். அம்ருதாவும், ப்ரனய்யும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் போராடி திருமணம் செய்து கொண்டனர். ப்ரனய் வீட்டார் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அம்ருதா கர்ப்பம் அடைந்த செய்தி கேட்டு பின்னர் வீட்டில் சேர்த்துக் கொண்டனர். அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பெரிய அளவில் திருமண வரவேற்பு நடத்தினர். இந்த நிகழ்வுக்கு அம்ருதாவின் பெற்றோர்கள் வரவில்லை. 

இதனிடையே, கர்ப்பிணியான அம்ருதாவை மருத்துவ பரிசோதனைக்காக நெலகொண்டாவில் தனியார் மருத்துவமனைக்கு ப்ரனய் அழைத்துச் சென்று வந்துள்ளார். அப்படி கடந்த வெள்ளிக்கிழமை (செப்.14) மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றபோதுதான் அம்ருதா கண் முன்னே ப்ரனய் மர்ம நபரால் வெட்டிக் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தெலுங்கானாவையே உலுக்கியுள்ளது. அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், ப்ரனய் குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் இருந்தே மிரட்டல் விடுத்து வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அம்ருதாவும் தனது கணவர் கொலைக்கு தனது தந்தையும், மாமாவும்தான் காரணமாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். 

கொலைச் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திலேயே ப்ரனயின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணையின் அடிப்படையிலும் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், அம்ருதா மாமா மற்றும் மற்றொரு நபர் உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் கொலை, குழுவாக சேர்ந்து குற்றச்சதியில் ஈடுபடுதல், கொலைக்கு உடந்தையாக இருத்தல், ஆணவக்கொலை உள்ளிட்ட பிரிவுகளிலும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com