வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைக்க வேண்டிய புரோகிதர் திருமணத்தின்போது பெண்ணின் தாலியில் கோர்க்க வேண்டிய தங்கமணி குண்டுகளை திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேத மந்திரங்கள் முழங்க, பஞ்சபூதங்களின் சாட்சியாக, பச்சை தோரணங்களுக்கு மத்தியில் பெரியோர்கள் ஆசியுடன் புரோகிதர் திருமணம் செய்து வைப்பார். ஆனால் தெலங்கானாவில் மணமகளின் கழுத்தில் கட்டிய தாலியுடன் கோர்க்க வேண்டிய ரூ. 1.60 லட்சம் மதிப்புள்ள தங்கமணி குண்டுகளை புரோகிதர் திருடி சென்றுள்ளார்.
தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் துப்ரானில் கடந்த 16ஆம் தேதி படலப்பள்ளியைச் சேர்ந்த ஞானசந்தர் தாஸ்க்கும் - நர்சபூர் மண்டலத்தில் கோல்லப்பள்ளியை சேர்ந்த வசந்தாவிற்கும் நடைபெற்ற திருமணத்தை கஜ்வெல்லியிலிருந்து வந்த புரோகிதர் திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு முன்பு மணமகனுக்கும் மணமகளுக்கும் சம்பர்தாய முறைப்படி சடங்குகள் செய்த புரோகிதர், பெண்ணின் தாலி மற்றும் தாலி செயினில் கோர்க்க வேண்டிய தங்கமணி குண்டுகள் என அனைத்தையும் மண மேடையில் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்தார்.
இதையடுத்து புரோகிதர் தங்கமணி குண்டுகளை யாருக்கும் தெரியாமல் தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்த புரோகிதர் பாதியிலேயே அங்கிருந்து தலைமறைவானார். திருமண வீட்டாரும் வந்த உறவினர்களை கவனிப்பதில் இதனை கவனிக்கவில்லை.
பின்னர், அனைவரும் வீட்டிற்குச் சென்ற நிலையில, தாலியில் கோர்க்க வேண்டிய தங்கமணி குண்டுகளை காணவில்லை என்று அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் திருமண வீடியோவை போட்டுப் பார்த்துள்ளனர். அப்போது அதில், புரோகிதர் தங்கமணி குண்டுகளை திருடியது தெளிவாக பதிவாகி இருந்தது.
இதைத்தொடர்ந்து புரோகிதருக்கு போன் செய்தனர். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து கஜ்வெல்லில் உள்ள புரோகிதர் வீட்டிற்கு சென்று திருமண வீட்டார் கேட்டபோது, புரோகிதர் 3 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து துப்ரான் காவல் நிலையத்தில் புகார் அளித்த திருமண வீட்டார் புரோகிதரிடம் இருந்து தங்கமணி குண்டுகளை பெற்றுத்தர வேண்டுமென புகார் அளித்துள்ளனர்.