தெலங்கானா: நீட் தேர்வில் வென்ற 190  பட்டியலின மாணவர்கள்

தெலங்கானா: நீட் தேர்வில் வென்ற 190 பட்டியலின மாணவர்கள்

தெலங்கானா: நீட் தேர்வில் வென்ற 190 பட்டியலின மாணவர்கள்
Published on

தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா சமூகநல உண்டு உறைவிட கல்வி நிறுவனச் சங்கத்தின்கீழ் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 190 பட்டியலின மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்று சாதித்துள்ளனர். கடந்த ஆண்டில் 108 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

தற்போது நீட் தேர்வில் வெற்றிபெற்ற 190 மாணவர்களில் 142 பேர் தெலங்கானா சமூக நல பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். 48 பேர் தெலங்கானா பழங்குடி நலப் பள்ளிகளில் படித்தவர்கள். அதில் சில மாணவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த மாணவர்கள் அனைவரும் மிகவும் பின்தங்கிய பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய பெற்றோர்கள் விவசாயப் பணிகள், தேநீர் விற்பனை, பீடி சுற்றுதல், காய்கறி விற்பனை, மெக்கானிக், கொத்தனார் மற்றும் செக்யூரிட்டி போன்ற வேலைகளைச் செய்பவர்களாக உள்ளனர்.

அகில இந்திய அளவில் பட்டியலின பிரிவில் 85 வது இடத்தைப் பெற்றுள்ள மாணவி தேஜாவத் கிரிஜா, " டாக்டராக வேண்டும் என்பது என் கனவு. அந்தக் கனவை நான் நெருங்கிவிட்டேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார். அவர் வானாபார்த்தி என்ற பகுதியைச் சேர்ந்தவர். மாணவியின் பெற்றோர் விவசாயிகள். குடும்பத்தில் அவர் முதல் தலைமுறை பட்டதாரி.

கொரோனா பாதிப்புக்குப் பிறகு நீட் தேர்வை எழுதி வெற்றிபெற்றுள்ள மாணவர் அபிலேஷின் தந்தை ரமேஷ், "தேர்வுக்கு முன்பு என் மகன் கொரோனா தொற்றுக்கு ஆளானான். ஆனாலும் அதிலிருந்து மீண்டு தேர்வில் வெற்றி பெற்றுள்ளான். அவனுடைய வெற்றியில் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். எங்கள் குடும்பத்தில் அவன்தான் முதல் மருத்துவ மாணவன்" என்கிறார்.

நீட் தேர்வில் வென்றுள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 190 பட்டியலின மாணவர்களுக்கும் தெலங்கானா அரசின் நிதியுதவியுடன் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com