ஐதராபாத் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடிக்கு மருத்துவமனையிலேயே திருமணம் நடைபெற்றது.
ஐதராபாத் அருகே உள்ள விகாராபாத் நகரை சேர்ந்த மோட்டார் மெக்கானிக் முகமது நவாஸ். இவர் அதே ஊரை சேர்ந்த ரேஷ்மா என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் காதல் குறித்து தெரிந்துகொண்ட ரேஷ்மாவின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தன்னுடைய காதல் நிறைவேறாது என்று கருதிய ரேஷ்மா கடந்த 8 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து ரேஷ்மாவை அவருடைய பெற்றோர் விகாராபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த முகமது நவாஸ், ரேஷ்மா குடித்த மருந்து பாட்டிலை பார்த்துவிட்டு தருவதாக கூறி மருத்துவர்களிடம் வாங்கி, மீதமிருந்த மருந்தை குடித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் முகமது நவாஸ் மற்றும் ரேஷ்மாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக இருவரையும் தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல்நிலை சீரான நிலையில் முகமது நவாஸ், ரேஷ்மா ஆகியோரின் காதலின் உறுதியை புரிந்து கொண்ட அவர்களுடைய பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இந்த நிலையில் மணமகனுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை ரேஷ்மா குடும்பத்தார் வரதட்சணையாக வழங்கினர். முகமது நவாஸ் குடும்பத்தார் ரேஷ்மாவுக்கு 5 ஆயிரம் ரூபாய் மெகர் கொடுத்து இரண்டு பேருக்கும் மருத்துவமனையிலேயே மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சாட்சியாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.