ராகுல்காந்தி பாரத் ஜூடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் முடிவடைய இருக்கிறது. இடையில் 15 மாநிலங்களில் சுமார் 6700க்கும் மேற்பட்ட கிலோ மீட்டரை இந்த யாத்திரை கடக்க உள்ளது.
பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் 34 ஆவது நாளான இன்று யாத்திரை தற்போது பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீகார் மாநிலம் சசராமில் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்ற நிகழ்வில் ராகுல் காந்தியுடன் பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கலந்துகொண்டார்.
திறந்த நிலை வாகனத்தில் தேஜஸ்வி யாதவ் வாகனத்தை இயக்க ராகுல் அருகில் இருந்தபடி யாத்திரையை மேற்கொண்டனர். சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்ற தொண்டர்கள் தலைவர்களுக்கு வரவேற்பை அளித்தார்.
தொடர்ந்து கைமூரில் துர்காவதி பிளாக்கில் தனேய்ச்சாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுலுடன் தேஜஸ்வி மேடையை பகிர்ந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைமூரில் பிற்பகல் 3 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிகாரில் INDIA கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறியப் பின் ராகுலும் தேஜஸ்வி யாதவும் ஒன்றாக பொதுவெளியில் தோன்றுகின்றனர்.
யாத்திரையின் போது கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “இந்த அரசு வளர்ச்சி என்று சொல்வது விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரானது. வளர்ச்சி என்ற பெயரில் அனைத்தும் அதானியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அது வளர்ச்சி அல்ல திருட்டு” என தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இன்று மாலை 5 மணியளவில் உத்தரப்பிரதேசத்தில் நுழைய உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 25 ஆம் தேதிவரை யாத்திரை நடைபெறும். இடையே பிப்ரவரி 22 மற்றும் 23 என இரு நாட்கள் இடைவெளி விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் யாத்திரை நுழையும் போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.