லாலு பிரசாத் யாதவை சந்தித்த தேஜ் பிரதாப் யாதவ்
ஜார்க்கண்ட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ராஷ்டிரிய ஜனதா தள நிறுவனத் தலைவர் லாலு பிரசாத் யாதவை அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சந்தித்தார்.
கால்நடைத் தீவன வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், உடல் நலக்குறைவு காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கட்சிப் பொறுப்புகளை அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ் கவனித்து வரும் நிலையில், தனது தந்தையை சந்திக்க மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ரிம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார். மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடக்கும் முதல் சந்திப்பு என்பதால் இந்த நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கடந்த சில நாட்களுக்கு முன் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார். இவர் தனது தம்பி தேஜஸ்வி யாதவ்வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து வெளியேறிய அவர் ‘லாலு ராப்ரீ மோர்சா’ என்ற புதிய கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.