லண்டனில் நொறுக்குத்தீனிகளை மட்டுமே உண்டு வந்த இளைஞருக்கு காது மற்றும் கண் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பத்து ஆண்டுகளாக நொறுக்குத்தீனிகளை மட்டுமே உண்டு வந்துள்ளார். உணவு வகைகள், பழங்கள், காய்கறிகளை அவர் உண்பதே இல்லை. சிப்ஸ், கார வகைகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ரொட்டி வகைகள் இவைதான் அந்தச் சிறுவனின் மெனு லிஸ்ட். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்த வகையான நொறுக்குத் தீனிகளையே உண்டு வந்த சிறுவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சத்து குறைபாடு ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் 14வது வயதில் காது கேட்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துள்ளது. அதற்குப் பிறகும் கூட கவனம் கொள்ளாத சிறுவனுக்கு தற்போது பார்வையும் பறிபோனது. சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடலில் சத்துகளே இல்லாத நிலையில், நரம்புகள் பாதிக்கப்பட்டு காது, கண் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய சிறுவனின் தாயார், 7 வயதுக்கு பிறகு அவன் சாப்பாடு சாப்பிடுவதே இல்லை. பள்ளிக்கு அனுப்பும் மதிய உணவை அப்படியே கொண்டு வருவான். பழவகைகளையும் அவன் சாப்பிடுவதில்லை. ஆனால் நொறுக்குத்தீனிகளால் அவன் குண்டாகவில்லை. அதனால் நாங்கள் கவனம் கொள்ளாமல் விட்டுவிட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், ''சிறுவன் உணவுகள் உட்கொள்ளுவதை வெறுக்கும் ஒருவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அதனால் பல வருடங்களாக உணவு வகைகளை உட்கொள்ளாமல் இருந்ததால் சத்து குறைபாடு ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளன'' எனத் தெரிவித்துள்ளனர்