துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ எடுக்கும்போது எதிர்ப்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதிக் வதேகர்(17). இவர் அவரது உறவினர்கள் சன்னி பவர்(20), நிதின் வதேகர் (27), 11 வயது சிறுவன் மற்றும் மற்றொருவருடன் சேர்ந்து உறவினர் ஒருவரின் சடங்கு நிகழ்ச்சிக்கு சிர்தி என்ற இடத்திற்கு நேற்று சென்றுள்ளார். அப்போது அனைவரும் ஹோட்டல் அறையில் தங்கியிருக்கும்போது திடீரென டிக்டாக் வீடியோ எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து தங்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை வைத்து பிரதிக்கின் உறவினர் ஒருவர் டிக்டாக் வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அப்போது கையில் இருந்த நாட்டு துப்பாக்கி எதிர்ப்பாராத விதமாக திடீரென வெடித்தது. இதில் துப்பாக்கியில் இருந்த குண்டு பிரத்திக் மீது பாய்ந்தது.
அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் கட்கே கூறுகையில், “பிரதிக் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் மற்றவர்கள் அறையை விட்டு வெளியே தப்பித்து ஓடினர். ஹோட்டல் நிர்வாகம் அவர்களை தடுத்து நிறுத்தியது. ஆனால் அதில் ஒருவர் தப்பித்து ஓடிவிட்டார். தொடர்ந்து பிரதிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சன்னி பவார் மற்றும் நிதின் வதேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை தேடி வருகிறோம். மற்றொருவர் மைனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.