ஐடி துறையில் “வொயிட் காலர் அடிமை நிலை” - நீதிமன்றத்தில் ஊழியர்கள் மனு

ஐடி துறையில் “வொயிட் காலர் அடிமை நிலை” - நீதிமன்றத்தில் ஊழியர்கள் மனு
ஐடி துறையில் “வொயிட் காலர் அடிமை நிலை” - நீதிமன்றத்தில் ஊழியர்கள் மனு
Published on

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சர்வதேச அளவில் 8 மணி நேர வேலைதிட்டம் சட்டமாக கொண்டு வரப்பட்டது. ஆனால், எல்லா இடங்களிலும் இந்த சட்டம் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. பல இடங்களில் 10 மணி நேரம், 12 மணி நேரம் என தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலை இன்றளவும் உள்ளது. வேலை நேரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களிலும் உள்ளன.

இந்நிலையில், ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வேலை நேரம் தொடர்பாக ஐடி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர் அமைப்பு சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அசெஞ்சர், கோக்னிசண்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு கூடுதலாக 2 மணி நேரத்திற்கு மேல் பணி செய்ய நிர்பந்தப்படுத்துவதாக அதில் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், வேலை என்ற பெயரில் வொயிட் காலர் அடிமை நிலை நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேச கடைகள் மற்றும் ஸ்தாபனங்கள் சட்டம்-1988 (தற்போது, தெலங்கானா கடைகள் மற்றும் ஸ்தாபனங்கள் சட்டம்-1988 என மாற்றப்பட்டுள்ளது) என்ற அரசாணையில், “நிறுவனங்கள் தொழிலாளர்களை ஒருநாளைக்கு 8 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வைக்க முடியாது. ஒரு வேலை தொழிலாளர்கள் கூடுதலாக வேலை செய்தால், அதற்கேற்ப ஊதியத்தை வழங்க வேண்டும். அதாவது வாரத்திற்கு 6 மணி நேரம், வருடத்திற்கு 24 மணி நேரம் கூடுதலாக வேலை செய்தால் கூடுதல் ஊதியம் அளிக்க வேண்டும். 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். 12 நாட்கள் கேசுவல் விடுப்பு அளிக்க வேண்டும். 12 நாட்கள் நோய்வாய்ப்படுவதற்கான விடுப்பு அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐடி ஊழியர்களுக்கு வேலை நேரம் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று வழக்கு தொடர்ந்த ஊழலுக்கு எதிரான கூட்டமைப்பின் தலைவர் விஜய் கோபால் கூறியுள்ளார்.

வழக்கு தொடர்ந்த சாய் பிரசாத் என்பவர் கூறிய போது, “நாள் ஒன்றிற்கு 10 மணி நேரம் வேலை செய்கிறேன். கூடுதலாக எந்த ஊதியமும் அளிக்கவில்லை. அந்த 10 மணி நேரமும், அலுவலகத்திற்கு சென்று திரும்புகிற என்னுடைய பயண நேரத்தை தவிர்த்துதான். ஐடி துறையில் கடந்த 10 வருடங்களாக நான் பணியாற்றி வருகின்றேன். ஆனால், எனக்கு வேலை நேரம் குறித்த எந்த சட்ட விதிமுறைகளும் தெரியாது. முதலில், எங்களுக்கு 9 மணி நேரம் ஷிப்ட் இருந்தது. அதன்பிறகு 10 மணி நேரமாக மாற்றப்பட்டது. ஆனால், கூடுதலாக வேலை செய்யும் நேரம் ஓவர் டைம் ஆக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை” என்றார். 

மேலும், தனது நிறுவனத்தின் ‘கேப்’ முறை குறித்து அவர், “அலுவலகம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக ஆபிஸ் வாகனத்திற்காக தயாராக காத்திருக்க வேண்டும். 10 மணிக்கு அலுவலகம் தொடங்குகிறது என்றால் 8 மணிக்கே தயாராக இருக வேண்டும். ஆபிஸ் வாகனம் அல்லாமல் தங்கள் விருப்பபடி வரவேண்டும் என்றால் அதற்கு அலுவலகம் பணம் தராது” என்று வேதனையுடன் கூறினார். 

மற்றொரு மனுதாரர் கூறிய போது, ‘உணவு இடைவெளி அல்லாமல் 9 மணி நேரம் வேலை செய்கிறோம். வருடத்திற்கு 22 நாட்கள் மட்டுமே விடுப்பு கிடைக்கிறது. எங்களுடைய பிரச்னை என்றால் எங்கள் உரிமைகள் என்னவென்று எங்களுக்கே தெரியவில்லை. நோட்டீஸ் காலம் அதிக அளவில் இருக்க வேண்டும். வேலை நேரம் இல்லாத போதும் வாட்ஸ் அப் குரூப்பில் இருக்க வேண்டும் என்பதில் இருந்து விலக்கு வேண்டும்’ என்றார்.

இந்த மனு தொடர்பாக விளக்கம் கேட்டு ஐடி நிறுவனங்கள் மற்றும் தெலங்கானா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com