ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?
Published on

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தி வருகிறது. 2019 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த லீக்கில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 9 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஆறு அணிகளோடு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். அதில் மூன்று தொடர் சொந்த மண்ணிலும், மூன்று தொடர் அயல்நாடுகளிலும் விளையாட வேண்டும் என்பது நிபந்தனை. அந்த தொடர்கள் இரண்டு முதல் ஐந்து போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர்களாக இருக்க வேண்டும். அதில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணி வரும் ஜூன் 2021இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் என அறிவித்தது ஐசிசி. 

அதில் நியூசிலாந்து அணி 70 சதவிகிதத்துடன் 420 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டியில் விளையாடுவதையும் அந்த அணி உறுதி செய்தது. 

இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக இப்போது இறுதி போட்டியில் விளையாடப் போவது யார் என்பதற்கு தான் இப்போது போட்டா போட்டி நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதி விளையாடும் 4 போட்டிகள் கொண்ட நடப்பு டெஸ்ட் தொடர் தான் இறுதி போட்டியில் விளையாடப் போகும் மற்றொரு அணி எது என்பதை உறுதி செய்யும் DECIDER தொடராக அமைந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது சற்று பின்னடைவாக உள்ளது.

இதில் விளையாடாமல் உள்ள ஆஸ்திரேலிய அணி ‘இந்தியா - இங்கிலாந்து’ டெஸ்ட் தொடரை ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என சொன்னபடி தனது வாய்ப்புக்காகவும் காத்துள்ளது. 

இந்தியா இறுதி போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதா?

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தியா 71.70 சதவிகிதத்துடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை டெஸ்ட்டின் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதனால் தற்போது புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய இப்போது 0 - 1 என பின்தங்கியுள்ளது. எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவாமல் இந்தியா குறைந்தபட்சம்  இரண்டு போட்டிகளில் வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடலாம். இந்த தொடரை இந்தியா 3 - 1 அல்லது 2 - 1 என கைப்பற்றினால் மட்டும் தான் இறுதி போட்டியில் விளையாட முடியும். இல்லையென்றால் இந்தியா அந்த வாய்ப்பை இழக்கும். 

இங்கிலாந்து அணிக்கான வாய்ப்பு எப்படி?

முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியின் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இருந்தாலும் இறுதி போட்டியில் விளையாட இங்கிலாந்து அணி இந்த தொடரை 3 - 1, 3 - 0 அல்லது 4 - 0 என கைப்பற்றியாக வேண்டும். அதனால் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் குறைந்தது 2 வெற்றிகளை இங்கிலாந்து பெற்றாக வேண்டும்.   

அப்படியில்லாமல் இங்கிலாந்து அணி 1 - 0, 2 - 0, 2 - 1 என வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்று விடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com