“கொரோனா தாக்கினால் தாக்கட்டும்” - தாய் நாட்டினரை துணிச்சலாக மீட்டெடுத்த இந்திய விமானிகள்

“கொரோனா தாக்கினால் தாக்கட்டும்” - தாய் நாட்டினரை துணிச்சலாக மீட்டெடுத்த இந்திய விமானிகள்
“கொரோனா தாக்கினால் தாக்கட்டும்” - தாய் நாட்டினரை துணிச்சலாக மீட்டெடுத்த இந்திய விமானிகள்
Published on

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 603 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 31 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் குறித்து தெரிய வருவதற்கு முன்பே எச்சரிக்கை விடுத்த சீனாவின் வூஹானைச் சேர்ந்த மருத்துவர் லீ வென்லியாங் என்பவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மருத்துவர் எச்சரிக்கை விடுத்தபோதே அரசாங்கம் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் கொரோனா வைரஸால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என அந்நாட்டு மக்கள் கொந்தளித்து வருகின்றனர். வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் பேருந்து, ரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அப்போது வூஹான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவ, மாணவியர்

சீனாவின் வூஹானில் சுமார் 45-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. அந்த கல்லூரிகளில் சுமார் 21 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதையடுத்து சீனாவை விட்டு வெளியேற முடியாமல் தவித்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. முதல் கட்டமாக கடந்த ஜனவரி 31-ஆம் தேதி டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானம் வூஹான் சென்றது. அதில் 324 இந்தியர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மேலும் 323 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் வூஹானில் இருந்து டெல்லிக்கு அழைத்து வந்தது.

இந்த மீட்புப் பணியை ஏர் இந்தியாவை சேர்ந்த 34 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாக செய்து முடித்தது. மீட்பு குழுவின் தலைவராக கேப்டன் அமிதாப் சிங் செயல்பட்டார். அவருடன் கேப்டன் கமல் மோகன், கேப்டன் சஞ்சய், கேப்டன் ரீஷா, கேப்டன் பூபேஷ் நரேன் ஆகியோர் விமானத்தை இயக்கினர். முதல் விமானத்தில் 5 விமானிகள், 15 ஊழியர்கள், 3 மருத்துவர்கள், 4 செவிலியர்கள் ஆகியோர் சென்றனர். முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கவச உடைகள், கண்ணாடி, தொப்பி, ஆகியவை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. 423 பயணிகளை அமர வைக்க முடியும் என்பதாலேயே இந்த விமானம் மீட்புப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த மீட்புப் பணி குறித்து மீட்புக் குழுவின் தலைவர் கேப்டன் அமிதாப் சிங் கூறுகையில், “ஆரம்பத்தில் எங்களுக்கு எப்போதும் போலவே இருந்தது. விமான வழிகளும் பிஸியாகவே இருந்தன. ஆனால் நாங்கள் இறங்கத் தொடங்கியதும், அமைதி தொற்றிக் கொண்டது. விமான நிலையம் முற்றிலும் அமைதியாக இருந்தது. அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டன. வீதிகள் காலியாக இருந்தன. அது ஒரு பேய் நகரம் போல இருந்ததை உணர முடிந்தது” எனத் தெரிவித்தார்.

மற்றொரு விமானி இதுகுறித்து கூறுகையில், “டெல்லியில் இருந்து 4 மணி நேரத்திற்கு பின்னர் வூஹான் சென்றோம். எங்கள் விமானம் டெல்லியில் புறப்பட்ட பிறகே, வூஹானில் தங்கியிருந்த இந்திய மாணவர்கள் தூதரகத்திற்கு செல்ல சீன அதிகாரிகள் அனுமதித்தனர். அதன்பின்னர், 8 மணி நேர மருத்துவ பரிசோதனைக்கு பின்பே விமானத்தில் ஏற்றப்பட்டனர். பிப்ரவரி 1-ம் தேதி காலை 7.30 மணிக்கு டெல்லிக்கு வந்தடைந்தோம். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்திய மாணவர்கள் முகாமுக்கு சென்றனர். கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மீண்டும் வூஹானுக்கு சென்று மீதமுள்ள இந்தியர்களையும் மீட்டு வந்தோம். இந்த மீட்புப் பணி மிகவும் சவாலாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

சீனாவில் இருந்தாலே நோய் தொற்றி விடுமோ என்ற அச்சத்தில் இருப்பவர்கள் மத்தியில், கொரோனா தாக்கினால் தாக்கட்டும் எனக் கூறி நோய் இருக்கும் இடத்தை அடைந்து அங்கு சிக்கி இருக்கும் தாய்நாட்டினரை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வந்த ஏர் இந்திய விமானிகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com