ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
ஆந்திராவில் தலைநகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமராவதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆந்திராவின் சட்டப்பேரவை அமராவதியிலும், ஆளுநர் மாளிகை மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலகங்கள் விசாகப்பட்டினத்திலும், நீதிமன்றங்கள் அனைத்தும் கர்நூல் நகரிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அமராவதி பகுதியை சுற்றி 29 கிராம மக்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோன்று, விஜயவாடாவில் பாஜகவினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் ஆந்திர மக்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினர்.
3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமராவதியில் விவசாயிகள் சங்கம் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கல்லா ஜெயதேவ் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.