பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், ஊழியர்கள் யாரையும் பணி நீக்கம் செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
2019-20ஆம் ஆண்டுக்கான நான்காவது காலாண்டில் டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் 8,049 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது தொடர்பான விவரங்களை மும்பையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது டிசிஎஸ் நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன் வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு பெருமளவில் லாபத்தை ஈட்டியுள்ள போதிலும், கொரோனா தொற்று காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். ஆனாலும் பணியாளர்கள் யாரையும் வேலையை விட்டு அனுப்பும் எண்ணம் இல்லை என்று கோபிநாதன் கூறினார்.
அதேவேளையில் இவ்வாண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். கல்லூரி வளாக நேர்காணல்களில் பணிக்குத் தேர்வான 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் டிசிஎஸ் நிறுவனத்தில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் ராஜேஷ் கோபிநாதன் உறுதிபடத் தெரிவித்தார்.