காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 22 லட்சம் பேருக்கு காசநோய் வருகிறது. ஆனால், உலக அளவில் 90 லட்சம் பேருக்கு இந்நோய் வருகிறது. உலகில் நான்கு பேருக்குக் காசநோய் வந்தால், அதில் ஒருவர் இந்தியர் என்கிறது உலகச் சுகாதார அமைப்பின் காசநோய் பற்றிய புள்ளிவிவரம்.
காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். அப்படிக் கண்டுபிடித்துவிட்டால் ஆறு மாதங்களில் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு நோயைக் குணப்படுத்திவிடலாம். காசநோய் வந்து சரியாக மருந்து மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது, முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாதது போன்ற காரணங்களால் மரணத்தை கூட தழுவ நேரிடலாம்.
இந்நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டசத்துமிக்க உணவுகளை உட்கொள்ளவும், சிகிச்சைக்காக மருத்துவமனை சென்று வர தேவையான போக்குவரத்து செலவை ஈடுகட்டும் வகையிலும் இந்தத் தொகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காசநோய் குணமாகும் வரை நோயாளிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படும். மத்திய அரசு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறது. ஊட்டசத்து குறைப்பாடும் காசநோய் நோய் அதிகரிப்புக்கு ஒரு காரணம் என்ற அடிப்படையில், அதனை ஈடுகட்ட மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.