அதி தீவிர புயலான டவ்-தே மேலும் வலுவடைந்து இன்றிரவு குஜராத்தில் கரையை கடக்க உள்ளது.
அரபிக்கடலில் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி தற்போது அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. கேரளா, கர்நாடகாவுக்கு மேற்குப் பகுதியில் நகர்ந்து சென்ற இந்த புயலால் அம்மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது. நள்ளிரவு நிலவரப்படி, டவ்-தே புயல் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் அரபிக்கடலில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்கிறது. மேலும், கோவாவில் இருந்து 300 கிலோமீட்டர் மேற்கு-வடமேற்கு திசையிலும் மும்பையிலிருந்து 210 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கு திசையிலும் குஜராத்தில் இருந்து 410 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கு திசையிலும் புயலானது நிலை கொண்டிருந்தது.
இன்னும் 12 மணிநேரத்திற்குள் அதி தீவிர புயல் மேலும் தீவிரமடைந்து இன்று மாலை குஜராத் கடற்பகுதியை நெருங்கும் என்றும் நள்ளிரவு அல்லது அதிகாலை போர்பந்தர் அருகே கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளில் கர்நாடகா மற்றும் கோவாவில் மட்டும் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதி தீவிர புயல் நெருங்குவதையொட்டி ஒன்றரை லட்சம் பேரை முகாம்களில் தங்கவைக்க குஜராத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்றும் நாளையும் கொரோனா தடுப்பூசிப் பணிகள் நிறுத்தப்படுவதாக குஜராத் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.