டிசிஎஸ் நிறுவனத்தை சிறப்பாக வழிநடத்தியதைத் தொடர்ந்தே, டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பார்சி இனத்தைச் சாராத டாடா குழுமத்தின் முதல் தலைவர் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன். நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிராமத்தில், நாள்தோறும் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்விப் பயின்ற சந்திரசேகரன், தற்போது 7 லட்சத்து 88 ஆயிரத்து 800 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் தலைவராக உயர்ந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சந்திரசேகரன், அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.
டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரியாக 2009ம் ஆண்டு சந்திரசேகரன் பொறுப்பேற்ற போது இருந்த அதன் வருமானத்தை விட தற்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, 2015-16ம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் ஈட்டித் தந்த வருவாய் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய். சந்திரசேகரனின் தலைமையின் கீழ் டிசிஎஸ் நிறுவனத்தின் சராசரி வளர்ச்சி ஆண்டுக்கு 14-16 சதவிகிதம். 4 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் நாட்டின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையை பெற்றதற்கு சந்திரசேகரனின் நிர்வாகத் திறமை முக்கியமானது. ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கு 70 சதவிகித வருவாயை ஈட்டிக் கொடுக்கும் நிறுவனமாக டிசிஎஸ் இருக்கிறது என்பதன் மூலம், சந்திசேரனின் திறமையை தெரிந்துகொள்ள முடியும்.