புகழ்பெற்ற எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் பலத்த பாதுகாப்புடன் கேரள மாநிலம் தேக்கடி சுற்றுலா தளத்தில் இயற்கை அழகைக் கண்டு ரசித்தார்.
உலகப்புகழ்பெற்ற கவிஞர், நாவலாசிரியர், விமர்சகர், கட்டுரையாளர், மனித உரிமைகள் மற்றும் பெண்ணிய ஆர்வலர், நாத்திகர் என பன்முகங்களை கொண்டவர் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். 1962ம் ஆண்டு வங்கதேசத்தில் பிறந்தவர். மருத்துவரான இவர் 1980களில் எழுதத் துவங்கினார். 1993ம் ஆண்டு இவர் எழுதிய 'லஜ்ஜா' வங்க மொழிப்புதினம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதனால் உலகப்புகழ் பெற்று பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. புகழின் உச்சிக்கு உயர்ந்தார் தஸ்லிமா நஸ்ரின்.
உத்திரப் பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்துக்களை திட்டமிட்டு கொலை செய்யப்படும் நிகழ்வுகளை கொண்டு புனையப்பட்ட இந்தப் புதினத்திற்கு வங்கதேச அரசுத் தடை விதித்தது. தஸ்லிமா நஸ்ரினுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்தன.
இதையடுத்து வங்கதேசத்திற்கு செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறி சுவீடனில் குடியேறினார். 2008ம் ஆண்டு இந்தியா வந்த இவர் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டில்லியில் வசிக்கிறார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாகமண்ணில் நடக்கும் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடிக்கும் வந்தார்.
துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேக்கடி வந்த அவருக்கு, கேரள வனத்துறை சார்பில் தனி படகு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் படகில் போலீஸ் பாதுகாப்பு வளையத்தோடு, முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் படகுச்சவாரி செய்து மகிழ்ந்தார். இரண்டு மணி நேரம் படகுப்போக்குவரத்தில் சென்ற அவர் வனங்களையும், வன விலங்குகளையும் ரசித்தார். பின் ஆனவச்சாலில் உள்ள தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அவர், இரவு வாகமண் கிளம்பிச்சென்று அங்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.