சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரிக்கு தேவஸம் போர்டோ அல்லது கேரள அரசோ சம்பளம் வழங்குவதில்லை என்று தாழமண்மடம் குடும்பம் விளக்கமளித்தது. இந்த தாழமண்மடம் குடும்பம் கேரள மாநிலம் செங்கனூரைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தினர்தான் பல ஆண்டுகாலமாக சபரிமலை ஐயப்பன் கோவிலின் தந்திரியாக பணியாற்றி வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் தற்போதைய தந்திரி ராஜீவரர் மீது தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால், தாழமண்மடம் குடும்பத்தினர் நேற்று விளக்கம் அளித்திருந்ததில் இதனை தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை நிறைவடைந்து மகர பூஜைக்காக நடை டிசம்பர் 30-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. வரும் ஜனவரி 14-ம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்கள் சில நாள்களுக்கு முன்பு அதிகாலையில் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததால், கோயில் நடை அடைக்கப்பட்டது. சன்னிதானத்தின் நடை திடீரென அடைக்கப்பட்டு, பெண்கள் தரிசனம் செய்ததால் தந்திரியின் பரிகார பூஜை செய்தார். இது குறித்து பலத்த சர்ச்சை எழுந்தது.
இது குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் " சபரிமலை தந்திரியின் நடவடிக்கை வினோதமாக இருக்கிறது. தந்திரியும், தேவஸம் போர்டு ஆகியோரின் வாதங்களை கேட்ட பின்புதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்க தந்திரிக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றுவது அதனை மதிப்பது தந்திரியின் கடமை. அப்படி அவரால் முடியாதென்றால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும். அவருக்கு வேறு வழியில்லை. மேலும் தேவஸம் போர்டு இது குறித்து ஆராய்ந்து தந்திரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் "சபரிமலை கோயில் நடை அடைப்பு குறித்து 15 நாள்களில் விளக்கம் தருமாறு தந்திரி கண்டரூ ராஜீவருவிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். மேலும் பெண்கள் நுழைந்ததற்காக தந்திரி பரிகார பூஜை செய்தது அபத்தம்". இதில் கேரள அமைச்சர் சுரேந்திரன் "தந்திரியின் செயல் மிகவும் மோசமானது, அவர் ஒரு பிராமண ராட்சன், நல்ல புத்தி இல்லாதவர்" என கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைச்சர் சுரேந்திரனுக்கு கணடனங்களை தெரிவித்தனர். மேலும் ஆளுங் கட்சியினர் பலர் தந்திரி மாதச் சம்பளம் வாங்குகிறவர் என தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இதன் காரணமாக 2000 ஆண்டுகாலமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் தந்திரியாக செல்லும் தாழமண்மடம் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்ருந்தனர் அதில் "சபரிமலை தந்திரி பொறுப்பு பாரம்பரியமாக உள்ளதாகும். இது தேவசம் போர்டு நியமிக்கும் பதவி கிடையாது. தந்திரியின் அதிகாரத்தை கேள்வி கேட்க தேவசம் போர்டுக்கோ, அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. தந்திரிக்கு தேவசம் போர்டு சம்பளம் வழங்குவது இல்லை. சபரிமலையில் நடக்கும் பூஜைகளுக்கு தட்சணை தான் தேவசம் போர்டு அளிக்கிறது. கடந்த சில தினங்களாக தந்திரி குறித்து பத்திரிகைகளில் தவறான கருத்துக்கள் வருகின்றன " என வேதனை தெரிவித்திருந்தனர்.
மேலும் " கி.மு. 100 ஆம் வருடத்தில் தான் சபரிமலை கோயில் தந்திரி பொறுப்பு தாழமண்மடம் குடும்பத்திற்கு கிடைத்தது. இந்த பொறுப்பு பரசுராம மகரிஷியிடம் இருந்து கிடைத்ததாகும். தந்திரிகள் தான் கோயில் ஆச்சாரங்களை நிர்ணயிக்கின்றனர். இதை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது. ஒவ்வொரு கோயிலுக்கும் அந்தந்த கோயிலுக்கே உரித்தான ஆச்சாரங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே தந்திரி குறித்து தவறான கருத்துக்கள் பரப்புவது நல்லதல்ல" என அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.