தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பிய நிலையில், நேற்றைய தினம் மக்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், "தமிழகத்தின் உரிமையை பறீக்காதீர்கள்” என ஆளுநருக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத்தொடர்ந்து இன்று மாநிலங்களவையிலும் தமிழக எம்பிக்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.
இன்று மாநிலங்களவையில், ஆளுநரின் நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் “தமிழக எம்பிக்களின் கோரிக்கை குறித்து தற்போது விவாதிக்க அனுமதிக்க முடியாது” என மாநிலங்களவை தலைவர் தெரிவித்துவிட்டார்.
இதனால் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து மாநிலங்களவையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா, இந்திய முஸ்லீம் லீக் எம்பிக்கள் கண்டன முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து ஆளுநரின் செயல் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததை கண்டித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் திமுக எம்பி திருச்சி சிவா, “மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் எப்படி திருப்பி அனுப்ப முடியும்? ஆளுநரின் அதிகாரம் தொடர்புடைய பிரச்னை இது; பாஜக ஆளும் மாநிலங்களிலும் நாளை இதுபோன்று நடக்கலாம்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். நாளை காலை 11 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: நாகப்பாம்பு கடித்ததால் கோமா நிலை - மீண்டு வந்தார் 'வாவா சுரேஷ்'