”தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி எப்போது தருவீர்கள்?”- மக்களவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்பிக்கள்!

தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்காததை அடுத்து, இன்று மக்களவையில் பாஜக - திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
ஆ.ராசா, டி.ஆர்.பாலு
ஆ.ராசா, டி.ஆர்.பாலுட்விட்டர்
Published on

மக்களவையில் பாஜக - திமுக காரசார விவாதம்

மத்திய பாஜக அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக மக்களவையில் திமுக குற்றம்சாட்டியதை அடுத்து, திமுக - பாஜக எம்பிக்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

நிவாரண நிதி தொடர்பாக விமர்சித்த ஆ.ராசா

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, “தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் பார்க்கிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்குவது எப்போது? எவ்வளவு வழங்கப்படும்? பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதில்லை.

இதுதொடர்பாக பலமுறை கேள்வி எழுப்பியும் அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது மாநில பேரிடர் நிதிக்கும், தேசியப் பேரிடர் நிதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, மாநில பேரிடர் நிதி என்பது பேரிடரின்போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும், இது அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானது. தேசியப் பேரிடர் நிவாரண நிதியில், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சமமான நிவாரண நிதி வழங்கும் நிலையை அளிக்கும் வகையில் புதிய விதிகளை வகுக்க வேண்டும்” என விமர்சித்தார்.

நிவாரண நிதி தொடர்பாக பதிலளித்த பாஜக

இதற்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், “மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் உள்ள நிதி ரூ.2,013 கோடியை மாநில அரசு பயன்படுத்தி இருக்கிறது. மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்புக்கு மத்திய அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கி உள்ளது. சென்னைக்கு மட்டும் மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது; வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க புதிய திட்டங்களை சென்னையில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது; வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசின் குழுவிற்கு முன் மத்திய குழுதான் சென்றது” என விளக்கம் அளித்தார்.

பாஜகவின் பதிலுக்கு கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு

அதற்கு, ”தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது ஏன்” என திமுக தரப்பில் நாடாளுமன்ற குழுத் தலைவரும் எம்.பியுமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அப்போது, மத்திய இணை அமைச்சர் முருகன் எழுந்து பதிலளித்தபோது, அவரைப் பார்த்து உட்காரும்படி டி.ஆர்.பாலு கையசைத்தார். ’இது குறித்து பேச உங்களுக்கு தகுதியில்லை’ என்று டி.ஆர்.பாலு கூறினார். டி.ஆர்.பாலு பேசிய இந்த வார்த்தையை பாஜகவினர் கச்சிதமாக பிடித்துக் கொண்டனர். பட்டியலின அமைச்சரை பார்த்து இப்படியான வார்த்தையை பயன்படுத்திவிட்டார் என்று பாஜக தலைவர்கள் பலரும் அவையிலேயே கண்டனம் தெரிவித்தனர். திமுக தரப்பிலும் இதற்கு பதில் கொடுத்தனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அவையில் அமளி நிலவிய நிலையில், மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக எம்பிக்களோடு கூட்டணி கட்சிகளின் எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டி.ஆர்.பாலு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, “வெள்ள நிவாரண நிதி தொடர்பான கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும். சம்பந்தமில்லாத அமைச்சரான முருகன் எழுந்து பதில் அளித்தார். அதோடு, தமிழகத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் பேசும்போது, எங்கள் பேச்சுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கோடு முருகன் செயல்பட்டார். தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது; ஓரவஞ்சனையாக நடத்துகிறது. இதைக் கண்டித்து வரும் 8ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்” என தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியில்லை என்ற கருத்து குறித்து பாஜக வைத்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கையில், “அது ஒன்று நாடாளுமன்ற அவைக்கு புறம்பான வார்த்தை கிடையாது.

சென்னையில் டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளம்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி ஒரே நாளில் அதிதீவிர கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதேபோல யாரும் எதிர்பாராத விதமாக டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த திடீர் பேய்மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளப் பாதிப்பு நிவாரணம் மற்றும் சேதங்களைச் சரிசெய்ய மத்திய அரசிடம் சுமார் 37,000 கோடி ரூபாய் நிதி கோரி பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்தார். இரண்டு இடங்களிலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்துவிட்டு சென்று மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளனர். ஆனாலும் இதுவரை தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை ஒதுக்கவில்லை. இதன்காரணமாக, இன்று மக்களவையில் வெள்ள நிவாரணம் தொடர்பாக பாஜக - திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அறிக்கை வெளியிட்ட டி.ஆர்.பாலு

முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு டி.ஆர்.பாலு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ள நிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து வரும் பிப்ரவரி 8 அன்று காலை 10 மணிக்கு திமுக மற்றும் தோழமை கட்சி எம்பிக்கள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழமைக் கட்சி எம்பிக்களும் கலந்துகொள்ள வேண்டும்” என அதில் கேட்டுக் கொண்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com