சென்னைக்குப் பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்துக்கு, ஷர்மிளா ராஜசேகர் என்ற பெண், நேற்று (டிச.13) இரவு 8.30 பாதுகாப்பு சோதனைக்காக நின்றுள்ளார். அப்போது பெண்கள் வரிசையில் இருந்து பாதுகாப்பு படை காவலர் ஒருவர், மற்றொரு ட்ரேவை எடுக்குமாறு இந்தியில் கூறியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்துள்ள வீடியோ செய்தியில், “‘நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” எனத் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர், அந்தப் பெண்ணிடம் ’நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்’ என வினவியுள்ளார். அதற்கு அவர், ’நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்’ என்று கூறியவுடன், ’தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதல்லவா’ என்று காவலர் கேட்டு, அவரிடம் ‘இந்தி தேசிய மொழி; இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
பின்னர் அந்தப் பெண் தன்னுடைய மொபைலை எடுத்து கூகுளில் டைப் செய்து, ’இந்தி அதிகாரப்பூர்வ மொழி மட்டுமே’ என வந்த தகவலை அதிகாரியிடம் காட்டியிருக்கிறார். இந்த சம்பவம் அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர், ’தாம் நடத்தப்பட்ட விதம் மிகவும் மனிதாபிமானமற்ற மற்றும் கலாசார உணர்வற்றதாக இருந்தது" என தெரிவித்திருந்தார். மேலும், இதுதொடர்பாக அவர் மேற்பார்வையாளரிடம் வாய்மொழியாகவும், விமான நிலைய குறைதீர்க்கும் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலமும் புகார் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. முன்னதாக இதுகுறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக நிறுவனர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் @CISFHqrs வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார்.
இது கடும் கண்டனத்துக்குரியது. இந்தி அலுவல் மொழியே தவிர, தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.