நாடாளுமன்றத்தில் 11-வது நாளாக இன்றும் அமளி: பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 11ஆவது நாளாக இரு அவைகளும் முடங்கியது. போட்டி நாடாளுமன்றம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்திய நிலையில் அவை நடவடிக்கைகள் முடங்கின.
'நாடாளுமன்றத்தை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள்': எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அவமதிப்பாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார். தினமும் முழக்கங்களை எழுப்பி அவைகளை முடக்குவதாக பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் பேசி இருக்கிறார்.
அரசியல் விரோதம் - 3 ஆண்டுகளில் 230 பேர் கொலை: அரசியல் காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளில் 230 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு புள்ளிவிவரத் தகவல் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டை 2ஆக பிரிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு: தமிழ்நாட்டை 2ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் எழுத்துப்பூர்வமாக முன்வைத்த கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஐசிஎம்ஆர் கூறிய பிறகு மாணவர்களுக்கு தடுப்பூசி: ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் வழங்கியதும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்திருக்கிறது.
கொரோனா 2-ஆவது அலை இன்னும் முடியவில்லை: இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
நீலகிரி சென்றார் குடியரசுத்தலைவர்: சென்னை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நீலகிரி சென்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அங்கு ராணுவ கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
தாயகம் திரும்பினார் பதக்க நாயகி பி.வி.சிந்து: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் நாயகி பி.வி.சிந்து நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ரத்து: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் ஆஜராக சம்மன்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து புகழேந்தி தொடுத்த வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் 24ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பா.ரஞ்சித் வழக்கு - இறுதி அறிக்கைக்கு இடைக்கால தடை: ராஜராஜசோழன் குறித்த பேச்சில் இயக்குநர் பா.ரஞ்சித் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இளங்கோவன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
புகாருக்குள்ளான டிஜிபி ஆஜராக உத்தரவு: பாலியல் புகாருக்கு உள்ளான டிஜிபி வருகிற 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த ஆணையைப் பிறப்பித்திருக்கிறது.
நிறைவேறாத திட்டம் - ரூ.6.39 கோடி வீண்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நிறைவேற்றப்படாத குடிநீர் திட்டத்திற்கு ஆறு கோடியே 39 லட்சம் ரூபாய் பயனற்ற செலவினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கூறியபடி அழைத்தும் இபிஎஸ் பங்கேற்கவில்லை: முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பில் பங்கேற்க இபிஎஸ்-க்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தாக அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். வாழ்த்துரையில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் பெயர் இடம்பெறவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்ததாகவும் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
வடக்கிந்திய கம்பெனி - கமல்ஹாசன் விமர்சனம்: கிழக்கிந்திய கம்பெனி போல, வடக்கில் வடக்கிந்திய கம்பெனி உருவாகி கொண்டிருக்கிறது என மத்திய அரசு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்திருக்கிறார்.
தீரன் சின்னமலை நினைவுதினம் - மரியாதை: விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் மரியாதை செலுத்தினர்.
வெண்கலப் பதக்கம் வெல்லுமா ஆடவர் அணி?: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் பெல்ஜியத்திடம் தோற்றது இந்திய அணி. வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது.
வூஹானில் மீண்டும் பரவும் கொரோனா: சீனாவின் வூஹான் நகரில் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. இதனால் அனைத்து மக்களையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.