விரைவுச் செய்திகள்: கரும்பூஞ்சைக்கு 148 பேர் பலி | உள்ளாட்சித் தேர்தல் |கூடுதல் தளர்வுகள்?

விரைவுச் செய்திகள்: கரும்பூஞ்சைக்கு 148 பேர் பலி | உள்ளாட்சித் தேர்தல் |கூடுதல் தளர்வுகள்?
விரைவுச் செய்திகள்: கரும்பூஞ்சைக்கு 148 பேர் பலி | உள்ளாட்சித் தேர்தல் |கூடுதல் தளர்வுகள்?
Published on

கரும்பூஞ்சை நோய்த்தடுப்பு குறித்து முதலமைச்சரிடம் வல்லுநர் குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. தமிழ்நாட்டில் இதுவரை 148 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

கூடுதல் தளர்வுகள் என்னென்ன?-முதல்வர் ஆலோசனை: ஊரடங்கு தளர்வுகள் குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கொள்ளையனை காவலில் எடுக்க போலீஸ் மனு: சென்னை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட அமீரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கூட்டாளிகளை பிடிக்க கைதானவரின் சமூகவலைதள பக்கங்கள் கண்காணிக்கப்படுகிறது.

தொடங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கியது. தமிழகத்திற்கான நீர் திறப்பு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. .

கோவையில் தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு: கோவையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை - எஸ்.ஐ கைது: சிறுமிக்கு துப்பாக்கிமுனையில் பாலியல் தொல்லை கொடுத்த சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

+2 மதிப்பெண் கணக்கீடு முறை-ஓரிரு நாளில் அறிவிப்பு?: தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை என்ன? என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் - திமுக ஆலோசனை: சென்னையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.

புறநகர் ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதி: சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆண் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் எப்போதும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் தொடங்கியது: சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாஜகவின் முதல் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஆயிஷா சுல்தானாவுக்கு முன்ஜாமீன்: தேசத்துரோக வழக்கில் கைதான திரைப்பட தயாரிப்பாளர் ஆயிஷா சுல்தானாவுக்கு முன் ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாளில் 51,667 பேருக்கு கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 ஆயிரத்து 667பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 6 லட்சத்து 12ஆயிரத்து 818ஆக குறைந்தது.

சீட்டுக் கட்டுப் போல சரிந்த கட்டடம்: அமெரிக்காவில் சீட்டுக் கட்டுப் போல 12 மாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கியவர்களில் சிறுவன் உட்பட 25 பேர் மீட்கப்பட்டனர். 99 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோபா அமெரிக்கா - காலிறுதியில் உருகுவே: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் காலிறுதியை உருகுவே உறுதி செய்தது. மூன்றாவது லீக் போட்டியில் பொலிவியா அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com