"மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தேவையான மொழியை கற்க வேண்டும்" - தமிழிசை

"மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தேவையான மொழியை கற்க வேண்டும்" - தமிழிசை
"மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தேவையான மொழியை கற்க வேண்டும்" - தமிழிசை
Published on

"மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தேவையான மொழியை கற்க வேண்டும்" என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.

தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சியான "தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள் வாரம்" என்ற நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 12 - 16 தேதி வரை நடைபெற்று வருகிறது. தினம்தோறும் அமர்வில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று தமிழ் பாரம்பரியம், கலாசாரம், மொழியின் பெருமை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் இன்றைய தினம் ”காரைக்கால் அம்மையார் தினம்” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரானருமான தமிழிசை சௌந்தர்ராஜன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தமிழ் கலாசாரம் குறித்து இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி. காசிக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்பதை, அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் காசி தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நமது தமிழ் கலாசாரத்தின் இணைப்பை பார்த்து தெரிந்து கொண்டுள்ளனர். அதேபோல டெல்லியில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் மற்ற மொழி பேசும் மாணவர்களும் தமிழ் கலாசாரத்தை தெரிந்துகொள்ள முடியும்.

மாநிலத்திற்கு உள்ளேயே தமிழின் பெருமையை பேசுவதைவிட, மற்ற மாநிலங்களுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை எடுத்துச்செல்லும் பொழுது மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழை கற்கும் ஆசை வரும். நாமும் பிற மொழிகளை கற்கவேண்டும். நம் தமிழ்மொழியை மற்றவர்களும் கற்க வேண்டும். இதுவே எனது கோரிக்கை.

உலக சாஸ்திரங்கள் எல்லாம், தமிழ் மொழியில் வேண்டும் என மகாகவி கேட்டது போல, நாம் மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, மொழியின் அவசியம் உணர்ந்து அவரவர்களுக்கு எந்த மொழிகள் தேவையோ அதை கற்க அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும். மொழியை கற்றுக்கொள் என்று கூறுவதை, மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகிறார்கள். அது தவறு. நம் இனிப்பான தமிழ் மொழியை அனைவரும் கற்கவேண்டும்” என்றார்

மேலும் உதயநிதி அமைச்சராக பதவியேற்று தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். நிகழ்ச்சியில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர்கள், புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com