பத்மாவதி திரைப்படத்தை எதிர்த்த வன்முறை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழக அறிவுஜீவிகள் பாஜக மாநில அரசுகள் கலவரக்காரர்களுக்கு உதவுகின்றன என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மூத்த பத்திரிகையாளர் என்.ராம், கல்வியாளர் வசந்திதேவி, கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தலைவர்,
ச.தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் யுகபாரதி உள்ளிட்ட தமிழக அறிவுஜீவிகள் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இந்தியாவை ஒற்றை மத ஆதிக்க நாடாக மாற்றத் துடிக்கும் சக்திகள் கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கின்றன. அண்மை நாட்களில் திரைப்படங்களையே அரசியல் பிரச்சனையாக்கி, மக்களிடைய பகைமையைக் கிளறிவிட்டு, அதிலே கொட்டும் குருதியில் நீந்தி அதிகாரத்தைக் கைப்பற்றவும், கிடைத்துள்ள அதிகாரத்தைத் தக்கவைக்கவும் முயல்கின்றன.
முன்பு மத வேறுபாடுகளைத் தாண்டிய மக்கள் நல்லிணக்கக் கருத்தை ஒரு புதிய வடிவில் கூறிய இந்தித் திரைப்படமாகிய ‘பி.கே.’ முதல், ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த தமிழ்த் திரைப்படமான ‘மெர்சல்’ வரையில் மதவெறி சக்திகளின் தாக்குதல் பட்டியல் நீள்கிறது. அந்தப் பட்டியலை முடித்துக்கொள்ளப் போவதில்லை என்பதன் வெளிப்பாடாகத் தற்போது ‘பத்மாவதி’ என்ற இந்திப் படத்தைத் திரையரங்குகளுக்கே வர விடாமல் தடுக்கும் கலவரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் முன்னோட்டக் காட்சி திரையிடப்பட்ட ஒரு திரையரங்கிற்குத் தீவைக்கப்பட்டது. மற்றொரு இடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கி வெடித்திருக்கிறது. ராஜஸ்தானின் சித்தூர் கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என்று அறிவிக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. தலைநகர் தில்லி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இப்படிப்பட்ட கலவரங்கள் பரவியிருக்கின்றன.
இத்தனைக்கும் பத்மாவதி கதை முற்றிலும் வரலாற்றுப்பூர்வமானது அல்ல. பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கற்பனைகள் பத்மாவதி என்ற கதாபாத்திரத்தை வைத்துப் புனையப்பட்டு வந்திருப்பதை வரலாற்றாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 21ம் நூற்றாண்டிலும் புதிய கற்பனைகளோடு அந்தக் கதை சொல்லப்படுவதில் எந்தத் தவறுமில்லை.
ஆனால், மக்களின் நம்பிக்கையை மதவெறியாகவும் சாதிய வன்மமாகவும் மாற்ற ஒரு கும்பல் முயல்கிறது. ராஜ்புத் கர்ணி சேனா, அகில பாரத சத்திரிய மகாசபா போன்ற அமைப்புகள், இது முற்றிலும் உண்மைக்கதை என்றும், திரைப்படத்தில் அந்த உண்மை திரிக்கப்பட்டிருப்பதாகவும், தன் கவுரவத்தைக் காத்துக்கொள்ளத் தீக்குளித்த அரசி பத்மாவதியை இழிவுபடுத்துவதாகவும் பிரச்சனை கிளப்புகின்றன.
படத்தின் தயாரிப்பாளர்/இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதியாக நடித்த தீபிகா படுகோனே ஆகியோர் தலைகளை வெட்டினால் 10 கோடி ரூபாய் தருவதாக ஹரியானா பாஜக-வின் மாநிலத் தலைவர்களில் ஒருவரே அறிவிக்கிறார். அடக்க ஒடுக்கமான பெண்ணுக்கு இலக்கணமாகக் கற்பிக்கப்பட்டு வந்துள்ள பத்மாவதி கதாபாத்திரம், படத்தில் சுதந்திரமாக ஆடிப்பாடுவது போல் காட்டப்படுவதும் இவர்களது ஆத்திரத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மிக முக்கியமாக, அலாவுதீன் கில்ஜி என்ற தில்லி சுல்தான் பத்மாவதியை விரும்பியதை மையமாகக் கொண்டு திரைக்கதை புனையப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவும் இவர்களது ஆத்திரத்திற்குக் காரணம் என்று தெரியவருகிறது. தணிக்கை வாரியம் படத்தைப் பார்த்துச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே, படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் பார்த்தறிவதற்கு முன்பாகவே இவர்கள் சர்வ அதிகாரம் படைத்தவர்களாக முன் தணிக்கை செய்ய முற்படுகிறார்கள்.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை இந்திய அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்துகிறது. அதன் பேரில் உறுதிமொழி ஏற்று ஆட்சிக்கு வருகிறவர்கள் கலையாக்கங்கள் இடையூறின்றி வெளியாவதற்கு உதவ வேண்டும். ஆனால் ராஜஸ்தான், உ.பி. மாநிலங்களின் பாஜக அரசுகளோ, கலவரக்காரர்களுக்கு உதவிடும் வகையிலேயே செயல்படுகின்றன. படக்காட்சிகளில் மாற்றம் செய்யாமல் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்புகிறார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே. இது படைப்பாளிகளின் கருத்துரிமை மறுக்கப்படுகிற பிரச்சனை மட்டுமல்ல. மக்களின் கருத்தறியும் உரிமை களவாடப்படும் பிரச்சனையுமாகும்.
வன்முறையாளர்களின் கவலை பத்மாவதியின் பெருமையைக் காப்பாற்றுவது அல்ல. இதில் நாட்டு மக்களிடையே மதப்பகைமையை மூட்டிவிடுகிற தீய உள்நோக்கமே உள்ளது.. சாதி உணர்வின் அடிப்படையில் அணிதிரட்டுகிற நோக்கமும் இருக்கிறது. புனிதம் என்ற பெயரில் பெண்களைப் பூட்டிவைக்கிற ஆணாதிக்க வக்கிர நோக்கமும் இருக்கிறது.
முற்போக்கான சமூக மாற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் இந்த மூர்க்கத்திற்கு எதிரான முழக்கத்தில் எங்கள் குரலையும் இணைத்துக்கொள்கிறோம். மதச்சார்பற்ற இந்தியாவின் மாண்பைச் சீர்குலைக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்பதில் மக்கள் ஒற்றுமையைப் பேண விரும்பும் அனைவரும் தோள் கொடுக்கக் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.