தமிழகத்தில் இருக்கும் திரிபுரா மக்களை பத்திரமாக பார்த்துக்கொள்வோம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ரயில் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பலர் நடந்தே சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மத்திய, மாநில அரசுகள் செய்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் திரிபுரா முதலமைச்சர் பிலாப் குமார் தேப் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டர் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். அதில், தமிழகத்தில் இருக்கும் திரிபுரா மக்களுக்கு தங்குமிடம், உணவு, பாதுகாப்பு மற்றும் மருத்துவம் ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் தமிழகம் தங்களுடன் இணைந்து செயல்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கட்டாயம் நாங்கள் அவர்களை பார்த்துக்கொள்வோம். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர எனது குழுவினரிடம் தெரிவித்துள்ளேன். கொரோனா வைரஸுக்கு எதிராக சேர்ந்து போரிடுவோம். நன்றி” என தெரிவித்துள்ளார்.