எல்.முருகன் முதல் ரஜினி வரை .. ராஜ்யசபா எம்பி ஆகும் இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்து!

எல்.முருகன் முதல் ரஜினி வரை .. ராஜ்யசபா எம்பி ஆகும் இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்து!
எல்.முருகன் முதல் ரஜினி வரை .. ராஜ்யசபா எம்பி ஆகும் இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்து!
Published on

மாநிலங்களவை எம்பி ஆகும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பல்வேறு துறை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது வாழ்த்துகளை தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “கிராமிய இசையையும், ஆன்மிக இசையையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று அடி அடியாக ரசிக்க வைத்த இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிப்பது தமிழகத்திற்கும்,தமிழருக்கும் பெருமை.... இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...

இசைஞானி இளையராஜா அவர்களின் இணையற்ற இசைக்கு இசைந்து அங்கீகாரம் கொடுத்து தமிழ்நாட்டின் இசைக்குரலை நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிக்க செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஏழ்மையான பின்புலத்தில் இருந்து வந்து பல்வேறு சாதனைகள் புரிந்த இசைஞானி இளையராஜா அவர்களின் தேசப்பணி சிறந்து விளங்க வாழ்த்துவோம்...!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை! #என்றும்_ராஜா_இளையராஜா” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய வாழ்த்து செய்தியில், ”இசை மாமேதை உத்வேகம் தரும் தனது வாழ்க்கை பயணத்தில் இசைஞானி இளையராஜா @ilaiyaraaja பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து, தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்து” என தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாவது, “மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது, “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com