தாஜ் மஹாலின் பெயரை ராம் மஹால் என மாற்றுவோம் என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உலக புகழ்ப்பெற்ற அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் நினைவுச் சின்னம் இருக்கிறது. இது முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜகானால் கட்டப்பட்டது. ஆக்ராவில் இருக்கும் தாஜ் மஹாலை காண உலகம் முழுவதில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாஜ் மஹால் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்.
பைரா தொகுதியின் எம்எல்ஏவான இவர் தாஜ் மஹால் இருந்த இடத்தில் ஏற்கெனவே இந்துக் கடவுளான சிவன் கோயில் இருந்ததாகவும், அதை இடித்துவிட்டே ஷாஜகான் தாஜ் மஹாலை கட்டியதாகவும் கூறியிருக்கிறார். ஆகவே ஆக்ராவின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் விரைவில் வேறு பெயரைச் சூட்டுவார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.