தற்போது பெங்களூரு நகரையே அலங்கரித்துக் காட்டும் இந்த பிங்க் நிற பூக்களின் வருகையை அனைவரும் அறியும் விதமாகவும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையிலும், கர்நாடக சுற்றுலாத்துறை இப்பூக்களின் புகைப்படங்களை கடந்த வருடம் பகிர்ந்திருந்தது. மேலும் கேரளா சுற்றுலாத்துறையும் இதனை பகிர்ந்து இப்பூக்களின் பெருமையை தெரிவித்தது. இந்நிலையில் இவ்வருட சீசனுக்கு, பூக்கள் பூத்துக்குலுங்க ஆரம்பித்துவிட்டன. இதனால் பெங்களூருவே பிங்க் நிறத்தால் மூடப்பட்டு கண்ணை கவர்கிறது!
ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் பூக்கும் தபேபுயா அவெலனெடா எனப்படும் இந்த பிங்க் நிற மலர்கள் பெங்களூரில் வசந்தகாலம் பிறந்துவிட்டது என்பதை குறிப்பதாக அமைகிறது. இதனை பார்ப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
பிங்க் ட்ரம்பெட்கள், டபேபுயா ரோசியா அல்லது பிங்க் பூயி எனப்படும் இந்த மலர்கள் தென் அமெரிக்காவில் பிரத்தியேகமாக வளர்பவை. இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இவை நியோட்ரோபிகல் எனும் மலர் வகையை சேர்ந்தவை. இம்மலர்களின் அழகினால் ஜனவரி, மார்ச் மாதங்களில் பெரும்பாலும் பெங்களூரே இளஞ்சிவப்பாக மாறிவிடும்.
இந்த மலர்கள், இந்தியாவில் நிலவிய காலனி ஆதிக்கத்தின் போது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டவை. இங்கிலாந்தை மிஸ் செய்த ஆங்கிலேயர்கள், இந்த மலர்மூலம் இங்கிலாந்தின் சீதோஷ்ன நிலையை கொண்டுவர முயன்றனர். அன்றைய காலகட்டத்தில் நடப்பட்ட இம்மரங்கள் இன்றளவும் காலம் தவறாமல் பூத்து குலுங்குகிறது என்றால் அதற்கு பெங்களூரில் நிலவும் சீதோஷண நிலையும் ஒரு காரணம். நாட்டின் மற்ற பகுதிகளில் வளர்வதற்கு சிரமப்படும் இத்தாவரங்கள் இங்கு சர்வசாதாரணமாக துளிர்விட துவங்கிவிடுகிறது.
தற்போது பெங்களூரில் தெருக்களில், சாலை ஓரங்களில், சுற்றுலாத்தலங்களில் பூத்துக்குலுங்கும் இப்பூக்களின் வருகையை புகைப்படத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.