கேரளாவில் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயது பெண் உயிரிழந்த நிலையில், பன்றிக் காய்ச்சலுக்கு அவர் பலியானதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதை கேரள சுகாதாரத்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார். ஆனாலும் சோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே உறுதி யான தகவல் வெளியாகும் என கூறப்பட்டது.
இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸுக்கு 23 வயது கல்லூரி மாணவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, அம்மாநிலம் முழுவதும் உஷார் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பத்தனம்திட்டா மாவட்டம் அனிக்காட் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் காய்ச்சல் காரணமாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் மணிபல் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்திருப்பதால், அதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.