வீடு தேடி உணவு விநியோக செய்யும் ஸ்விகி அதன் அடுத்த முயற்சியாக ‘ஸ்விகி ஸ்டோர்ஸ்’ என்ற ஒரு புதிய சேவையை ஆரம்பித்துள்ளது.
வீடு வீடாக உணவு விநியோகம் செய்ய தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ஸ்விகி. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஓட்டல்களில் இருந்து மக்கள் ஆர்டர் செய்யும் உணவினை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்த்து வருகிறார்கள். இதுநாள் வரை வெறும் உணவு விநியோகத்தை மட்டுமே செய்துவந்த இந்த நிறுவனம், தற்போது ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
அதாவது ‘ஸ்விகி ஸ்டோர்ஸ்’ என்று புதிய சேவை ஒன்றை தொடங்கியுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை சாமான்கள் போன்றவற்றை ஆர்டர் செய்து பெற முடியும் என ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சேவையை முதற்கட்டமாக ஹரியானவிலுள்ள குரு கிராமில் 3500 ஸ்டோர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்விகியின் சிஇஓ ஸ்ரீஹர்ஷா மஜித், “இந்த ஸ்விகி ஸ்டோர்ஸ் சேவை மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஸ்டோர்களிலிருந்தும் பொருட்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம். முதற்கட்ட சோதனை முயற்சியாக குருகிராமில் தொடங்கியுள்ளோம். கூடிய விரைவில் இந்தச் சேவை அனைத்து நகரங்களிலும் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.