கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அனைவரின் பெயரையும் வெளியிடுவேன் என்று ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி, ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சுங்கத்துறை, அமலாக்கப் பிரிவு, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆகியவை விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், கொச்சி நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் நேற்று வாக்குமூலம் அளித்தார். அதன் பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தங்கக் கடத்தல் சம்பவங்களில் கேரளாவில் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்களின் அனைவரின் பெயரையும் நீதிமன்றத்தில் நாளை (அதாவது இன்று) தெரிவிப்பேன்" என்றார்.