மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.
சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது ராகுல் தரப்பு உச்சநீதிமன்றத்தில், “ஒரு அவதூறு வழக்குக்காக 8 ஆண்டுகள் வரை குரல் கொடுக்காமல் இருக்க வேண்டுமா? ராகுலுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் பாஜகவினரால் தாக்கல் செய்யப்பட்டது” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றம், “பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேச்சுகளில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தண்டனை ஒருநாள் குறைவாக வழங்கப்பட்டிருந்தாலும் தகுதி நீக்கம் தொடர்பான விதிகள் பொருந்தியிருக்காது. ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையின் காரணமாக ஒரு தனி நபரின் உரிமை மட்டுமின்றி தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை ஏன் விதிக்கப்பட்டது என்பது பற்றி சூரத் நீதிமன்ற நீதிபதி விளக்கம் தர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வார் என கூறப்படுகிறது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அவர் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுத முடிவெடுத்துள்ளனர்.
ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை தற்பொழுது விரிவாக காணலாம்
1. ராகுல் காந்தி மேல் முறையீடு விவகாரம் தொடர்பாக இரு தரப்பிலும் விரிவான வாதங்கள் கேட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான மூல வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே அந்த வழக்கில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக மேற்கொண்டு எந்த கருத்துக்களையும் இந்த வழக்கில் நாங்கள் தெரிவிக்க விரும்பவில்லை.
2. அதே நேரத்தில் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான சில அம்சங்களை நாங்கள் பரிசீலித்தோம்.
3. குறிப்பாக கீழமை நீதிமன்ற நீதிபதி ராகுல் காந்தி வழக்கில் அதிகபட்ச தண்டனையை அவருக்கு விதிக்க எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் வழங்கவில்லை.
4. தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள தண்டனையை விட ஒரு நாள் குறைவாக இருந்திருந்தாலும் கூட தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார். எனவே எதற்காக அதிகபட்ச தண்டனையை வழங்கினார் என்பதற்கான காரணத்தை கீழமை நீதிமன்ற நீதிபதி வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்.
5. தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பல நூறு பக்கங்களை செலவிட்டுள்ளது. ஆனால், அவை எவற்றிற்குள்ளும் நாங்கள் செல்ல விரும்பவில்லை.
6. பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தல்.
7. ராகுல் காந்தியின் தொகுதியின் வாக்காளர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதை நாங்கள் கருத்தில் கொள்கிறோம்.
8. எனவே மேற்கூறிய காரணங்களுடன் சேர்த்து அதிகபட்ச தண்டனையை விதிக்க விசாரணை நீதிபதியால் எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிடுகிறோம்.
9. இந்த உத்தரவினால் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள மூல வழக்கின் விசாரணைக்கு எந்தவிதமான தாக்கமும் கிடையாது
10. மூல வழக்கின் விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.