வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க சமூக வலைத்தளமான ட்விட்டரை சுஷ்மா ஸ்வராஜ் அதிகம் பயன்படுத்தியவர்.
உலக அரசியலிலும் இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது ட்விட்டர். அதைப் பயன்படுத்தி மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைத்தவர் சுஷ்மா ஸ்வராஜ். ட்விட்டர் மூலம் 24 மணி நேரமும் வெளியுறவு அமைச்சகத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தார். இந்தியர்களோ வெளிநாட்டவரோ யார் வேண்டுமானாலும் ட்விட்டர் மூலம் சுஷ்மாவிடம் உதவி கேட்கலாம். பகல் என்றாலும் இரவென்றாலும் சுஷ்மாவிடம் இருந்து ட்வீட் மட்டுமின்றி கூடவே உதவியும் வரும்.
ஈராக்கில் சிக்கிய 168 இந்தியர்கள், தென்னாப்பிரிக்காவில் மாட்டிக் கொண்ட இந்தியப்பெண், ஏமனில் சிக்கிய 4 ஆயிரத்து 741 இந்தியர்கள் எனப் பலரை மீட்க ட்விட்டரை பயன்படுத்தியவர் சுஷ்மா. மகாத்மா காந்தியின் படத்தைப் போட்டு அமேசான் விற்பனை செய்த கால் மிதிகளை திரும்பப்பெற வைத்தது, தேன் நிலவு செல்லும் புதுமண தம்பதிக்கு பாஸ்போர்ட் கிடைக்கச் செய்தது என அனைத்தையும் சாத்தியப்படுத்தியது சுஷ்மாவின் ட்வீட்.
உதவி கேட்பவர்களுக்கு மத்தியில் தன்னை நோக்கி வரும் நகைச்சுவையான ட்வீட்டுகளுக்கும் பதில் அளிப்பார் சுஷ்மா. ஒருமுறை ஒருவர் தான் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் தன்னை மீட்க மங்கள்யான் செயற்கைக்கோளை அனுப்பும்படியும் ட்வீட் செய்தார். செவ்வாய் கிரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் உங்களுக்கு உதவி செய்யும், கவலை வேண்டாம் என அவருக்கு பதில் அளித்தார் சுஷ்மா. இப்படி ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்த சுஷ்மா உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் ட்வீட் செய்திருந்தார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்திருந்தார். என் வாழ்க்கையில் இந்தத் தருணத்திற்காக இத்தனை நாள் காத்திருந்தேன் என அதில் கூறியிருந்தார் சுஷ்மா. ட்விட்டர் மூலம் மக்கள் சேவையாற்றிய சுஷ்மா அதன் மூலமே தனது இறுதிக் கருத்துகளை உதிர்த்துவிட்டுச் சென்றுள்ளார்