காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுஷீல் குமார் ஷிண்டே நியமிக்கப்படலாம் என்ற செய்தி டெல்லி வட்டாரங்களில் சுற்றி வருகின்றன.
மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் ராஜினாமா செய்து வந்தனர். ராகுல் காந்தியும் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறினார். ஆனால், ராகுல் காந்தியை தலைவராக தொடர வேண்டும் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுலே தலைவராக தொடர வேண்டும் எனக் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், ராகுல் காந்தி தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதனையடுத்து, ராஜினாமா செய்யும் தலைவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் இதுவரை ராஜிமானா செய்துள்ளனர். 17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களை ராகுல் காந்தி நேற்று சந்தித்து பேசினார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் புபேஸ் பாகெல் ஆகியோரை ராகுல் காந்தியை சந்தித்தனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷீல் குமார் ஷிண்டேவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.