நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா ஜூலை 10ம் தேதி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
வங்கிகள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்ததாக, விஜய் மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றம் செய்துள்ளது நிரூபணம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ஜூலை 10 ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.