“அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தினை தனியார் கோவில்களிலும், மண்டபங்களிலும் நேரலையில் காண்பதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. ஆனால் அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்கள் அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்” - என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருந்தநிலையில், தமிழ்நாட்டில் தற்போது ராமர் கோவில் நேரலைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் வெகுபிரம்மாண்டமாக நடைபெற்று வரும்நிலையில் ஆங்காங்கே இது தொடர்பான சர்ச்சைகளும் எழுந்தவண்ணம் உள்ளன. அதன்படி ‘கோவில் நேரலைக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது’ என்று பாஜகாவை சேர்ந்த நிர்வாகி வினோத் என்பவர் அவசர மனு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் இது குறித்து மத்திய அரசின் தரப்பில் வாதிடுகையில், “தமிழ்நாடு அரசு ஒரு சில தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் ஆகியவற்றை நடத்தக்கூடாது, எல்இடி திரைகள் அமைத்து அயோத்தி கோவிலில் நடைபெறும் நிகழ்வை நேரலையில் ஒளிப்பரப்பு கூடாது என்று தடை விதித்துள்ளனர்” என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதற்கு உடனடியாக பதிலளித்த நீதிபதிகள், “தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எங்கே வெளியாகியுள்ளது? ஒரு சில காவலர்கள் தெரிவிக்கின்றனர் என்பதற்காக அதனை நாம் முழுமையான அரசின் தடை உத்தரவாக எடுத்து கொள்ளமுடியுமா? அப்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனில், அந்த தடையை தெரிவித்த காவல்துறை அதிகாரிகளை ஏன் எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
மேலும் தமிழக அரசு தரப்பில் இது குறித்து வாதிடுகையில் “எந்தவிதமான தடை உத்தரவினையும் தமிழ்நாடு அரசு பிறப்பிக்கவில்லை. இந்த மனுவானது அரசியல் உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்தக் கோவிலிலும் சிறப்பு பூஜைகள், அன்னதானம் வழங்குவது, எல்இடி திரை அமைத்து நேரலை காண்பது ஆகியவற்றிக்கு எந்தவித தடை உத்தரவும் வழங்கப்படவில்லை. பொது இடங்களில்தான் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி முழு தடை எதுவும் வழங்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
வாய்மொழியாக தமிழ்நாடு அரசு சார்பாக தற்போது இதுகுறித்து பதிலளிக்கப்பட்ட நிலையில் இதனையே எழுத்துப்பூர்வமாக சமர்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.