சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது, ரஃபேல் விமான முறைகேடு உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்கவுள்ளது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயுடன் நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், ஏ எம் கன்வில்கர், டிஒய் சந்திரசூட், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல் 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய மனு மீதும் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. காவலாளியே திருடன் என பிரதமரை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகியால் தொடரப்பட்ட வழக்கிலும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்புகளை வழங்கவுள்ள உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் கே. எம். ஜோசப் இடம்பெற்றுள்ளனர். வருகிற 17ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெறவுள்ள நிலையில், முக்கிய வழக்குகளில் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.