காஷ்மீர் சிறப்பு அதிகாரம் தொடர்பான வழக்கு: இன்று விசாரணை
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டப்பிரிவு 35 ஏ-வை நீக்கக் கோரும் மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் இல்லாத சிறப்பு உரிமைகளை காஷ்மீருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. அரசமைப்பு பிரிவு 35 ஏ-வின்படி காஷ்மீர் சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களை அரசமைப்பு சட்டத்துக்கு முரணானது எனக் கூறி எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யாரென வரையறுக்கும் அதிகாரத்தையும் அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள், உரிமைகள் உள் ளிட்டவற்றை முடிவு செய்யும் அதிகாரமும் காஷ்மீர் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம் காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் அசையா சொத்துகளை வாங்க முடியாத நிலையும் அங்கு வசிக்கும் வெளிமாநிலத்தவருக்கு பல்வேறு சலுகைகள் மறுக்கப்படும் நிலையும் உள்ளது. இந்நிலையில், 35 ஏ சட்டப்பிரிவு உரிய முறையில் அரசமைப்பு பிரிவில் சேர்க்கப் படாததால் அதன் செல்லுபடித்தன்மை குறித்தும் கேள்விகள் உள்ளன.
இந்நிலையில், இதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் 35 ஏ சட்டப்பிரிவு குறித்த நிலைப்பாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரில் தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது