மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.
சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது ராகுல் தரப்பு உச்சநீதிமன்றத்தில், “ஒரு அவதூறு வழக்குக்காக 8 ஆண்டுகள் வரை குரல் கொடுக்காமல் இருக்க வேண்டுமா? ராகுலுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் பாஜகவினரால் தாக்கல் செய்யப்பட்டது” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றம், “பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேச்சுகளில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த தண்டனை ஒருநாள் குறைவாக வழங்கப்பட்டிருந்தாலும் தகுதி நீக்கம் தொடர்பான விதிகள் பொருந்தியிருக்காது. ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையின் காரணமாக ஒரு தனி நபரின் உரிமை மட்டுமின்றி தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை ஏன் விதிக்கப்பட்டது என்பது பற்றி சூரத் நீதிமன்ற நீதிபதி விளக்கம் தர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வார் என கூறப்படுகிறது. நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அவர் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுத முடிவெடுத்துள்ளனர்.