“காஷ்மீர் மக்களுக்கு உரிய உரிமைகளை அளிக்க வேண்டும்” - ஐநா மனித உரிமை ஆணையம்
காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரிப்பதில் உச்சநீதிமன்றம் தாமதாக செயல்படுவதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி விலக்கி கொண்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைப்பு செய்தது. இந்த நடவடிக்கைக்கு பிறகு அங்கு சில கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனை எதிர்த்து பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது குறித்து ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கால்விலே (Rupert colville), “ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இன்னும் சில மனித உரிமைகள் அளிக்கப்படாமல் இருப்பது எங்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது. இந்திய அரசு உடனடியாக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் அளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அங்கு இந்திய அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை தளர்த்தி இருந்தாலும் இன்னும் மனித உரிமைகள் சில அங்கு மறுக்கப்பட்டு வருகிறது. இந்த உரிமைகளை இந்திய அரசு விரைவில் அளிக்க வேண்டும்.
மேலும் அங்கு சில கலவரங்கள் நடைபெறுவதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. அதேசமயம் ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் இந்தியாவின் உச்சநீதிமன்றம் மிகவும் தாமதமாக உள்ளது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டும் தற்போது செயல்படவில்லை. அதற்கான மாற்று ஆணையத்தையும் இந்திய அரசு அமைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.