கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் அவரது கண்முன்பாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரையும் தண்டனை காலம் முடியும் முன்னே கருணை அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது குஜராத் அரசு.
இதை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதவிர மேலும் சிலர் பொதுநல மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாக ரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, “பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கான காரணத்தை குஜராத் அரசு தெரிவிக்க வேண்டும். இது மிகக் கொடிய குற்றம் தொடர்பான வழக்கு என்பதால் பொதுமக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு முடிவு செய்திருக்க வேண்டும்.
இன்று பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது நாளை வேறு ஒருவருக்கு நடக்கலாம். அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். குற்றவாளிகளை எதன் அடிப்படையில் விடுதலை செய்தீர்கள் என்ற ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் நாங்கள் சொந்தமாக முடிவுக்கு வருவோம்' என்றனர். பின்னர் இந்த வழக்கை மே 2-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவித்ததற்கான காரணத்தை கூற குஜராத் அரசு மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பில்கிஸ் பானு பாலியல் வழக்கு தொடர்பான குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவித்தது பற்றிய உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்..!