மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் ஜாவேத் அகமது ஹஜாம். இவர் கடந்த 2022 ஆகஸ்ட் 13 மற்றும் 15 ஆகிய நாட்களுக்கு இடையில், பெற்றோர் ஆசிரியர் வாட்சாப் குழுவில் இரு குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் ஜம்மு காஷ்மீருக்கு ஆகஸ்ட் 5 கருப்பு நாள் என்றும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி - பாகிஸ்தான் சுதந்திர தினத்திற்கான வாழ்த்துகள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ஸ்டேட்டஸில், சிறப்புப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மகாராஷ்ட்ராவின் கோலாப்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அவர்மீது 153-A-ன் கீழ் பல்வேறு இனக்குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததாகவும், நல்லிணக்கத்தை பேணுவதற்கு எதிரான செயல்களை செய்ததாகவும் வழக்குகள் பதியப்பட்டன.
மும்பை உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி பேராசிரியர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம், பேராசிரியர் தனது கருத்துகளுக்கு குற்றவியல் ரீதியாக (criminally liable) பொறுப்பேற்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் பேராசிரியர் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, “இது அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கான அவரது எதிர்வினை. சிறப்புப் பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கான நாளை கருப்பு நாள் என விவரிப்பது அவரது எதிர்ப்பு மற்றும் வேதனையின் வெளிப்பாடாகும். 153-A-ன் கீழ் தடை செய்யப்பட்ட ஒரு விஷயத்தை செய்வதற்கான, எந்த ஒரு நோக்கத்தையும் இது பிரதிபலிக்கவில்லை.
சட்டப்பிரிவிவு 370ஐ ரத்து செய்ததையும், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதையும் விமர்சிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு. பிரிவு 19(1)(a) உத்தரவாதம் அளித்துள்ளதன் படி, இது அவரது பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதி. அரசின் மீதான ஒவ்வொரு விமர்சனமும் குற்றமாக கருதப்பட்டால் இந்திய அரசியலமைப்பின் இன்றியமையாத அம்சமான ஜனநாயகம் நிலைக்காது. அரசின் முடிவுகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத பகுதியாகும். பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்லது செயல்களின் பின்னணியில் உள்ள நோக்கத்தை நீதிமன்றங்களும் பரிசீலிக்க வேண்டும்.
மற்ற நாட்டு குடிமக்களுக்கு அந்தந்த சுதந்திர தினங்களில் வாழ்த்துகளை தெரிவிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. பாகிஸ்தான் மக்களுக்கு அவரது சுதந்திரதினமான ஆகஸ்ட் 14 அன்று வாழ்த்து தெரிவித்தால் அதில் தவறில்லை. இது நல்லெண்ணத்தின் வெளிப்பாடு. இத்தகைய செயல்கள் மக்களிடையே, பகை, எதிர்ப்பு உள்ளிட்ட தவறான எண்ணங்களை உருவாக்கும் என கூறமுடியாது. அவர் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அவர்மீது உள்நோக்கங்களைக் கற்பிக்க முடியாது.
கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாட்டின் அளவு குறித்து காவல்துறைக்கு கற்பிக்க வேண்டிய நேரம் இது. அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஜனநாயக விழுமியங்கள் குறித்து அவர்கள் உணரப்பட வேண்டும்” என தெரிவித்த உச்சநீதிமன்றம் வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.